Monday, September 15, 2014

தீபாவளி கவிதைப்போட்டி 2014


உன்மத்த சிறுக்கியவள்

 

ஒய்யார அழகியே

உன்மத்த சிறுக்கியே

கண்டாங்கி புடவைகட்டி

எனை களவு கொண்டவளே

ஓரக்கண் பார்வையால

உயிருக்குள் உறைஞ்சவளே

 

உன் வனப்ப பார்த்துவிட்டால்

கற்சிலையும் சிலாக்கிகுமடி

உன் கண்ணழகை கண்டுவிட்டால்

கயல்கூட நாணுமடி

 

நீ வச்ச பூவுக்கு

விலைமதிப்பே இல்லையடி

நீ தீண்டாத பூவெல்லாம்

தற்கொலைக்கு துடிக்குதடி

 

நீ தொடுத்த பூச்சரங்கள்

சாகாவரம் பெற்றதடி

உன் கை பட்டதால

கதவு கம்பி நெகிழுதடி

 

கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்

மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி

இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த

என் கற்புநெறி தகருதடி

 

காதலோடு உனைபார்த்தால்

ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்

திரையில் நீ தோன்றினால் போதும்

அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது

உன் வீட்டு கதவை தட்டும்

 

கடவுள் என் எதிரில் வந்தால்

உன் கொண்டையில ஒரு பூவாகவோ

கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ

காது லோலாக்கில ஒரு மணியாகவோ

உடனே மாற வரம் கேட்பேன்

தர மறுத்தால்

வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..

சிதையும் சமூகம்


கான்கிரீட் காடுகளாய்

பரந்து விரிந்து கொண்டிருக்கும்

பெருநகரங்களினூடே

சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது

கொஞ்சூண்டு மிச்சமிருக்கும்

செழுமையும் பசுமையும்...

 

பணத்திற்கும் பதவிக்கும்

பேயாய் பறக்கும் சில நபர்களிடம்

பொருளிழந்த வார்த்தைகளாய்

வலம் வருகின்றன

பகுத்தறிவும் சுயமரியாதையும்...

 

உடலிச்சைக்கு

இளந்தளிர்களை உருகுலைக்கும்

கயவர்களின் செயலால்

கல்லறைக்கு செல்கின்றன

நாகரீகமும் பண்பாடும்...

 

உயிர் வாழ்தல் பொருட்டு

எதிரியின் கால்நக்கும்

நயவஞ்சக கருநாக்குகளால்

வீழ்ந்து கிடக்கின்றன

வீரமும் விவேகமும்

 

தான்தோன்றித்தனமாய்

தலைஅறுபட்ட கோழியாய்

தறிகெட்டு ஓடும் இச்சமுதாயத்தில்

ஒரு கவிதை அழுகிறது

அருகிப்போன மனிதத்தன்மைக்கும்

கருகிப்போன தென்றலுக்குமாய்...

Friday, December 9, 2011

முல்லைப்பெரியாறு - பிரச்சனையும் தீர்வும்

முல்லைப்பெரியாறு – உண்மை நிலை
தமிழக-கேரள எல்லை பகுதியில் தீப்பற்றி எறிந்து கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை யாருக்கு தான் சொந்தம்..? கேரள எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அணைக்கு தமிழகம் உரிமை கோருவது நியாயம் தானா..? தமிழர்கள் பலருக்கே எழுந்துள்ள இதுபோன்ற கேள்விகளுக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்தும் அதன் வரலாறு குறித்தம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள “முல்லைப்பெரியாறு பிரச்சனையும் தீர்வும்” என்ற ஒர் ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு எம்நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

ஆவணப்படத்தை காண இங்கே சொடுக்கவும்

இயலுமெனில், சக தோழர்களுக்கும் அனுப்பி தமிழ் நாட்டின் நிலையை உணர்த்துவீர்

Tuesday, May 25, 2010

கடவுள் ஏன் கல்லானான்




கண் மூடி தியானிக்கையில்
கடவுள் வந்தமர்ந்தார் என் மனதில்
என்னுள் எழுந்த கேள்விக்கு
உவப்புடனே பதில் தந்தார்
இனிய தமிழில்

மண்மீது தான் படைத்த உயிர்களிலே
மனிதன் மட்டும் பாதை மாறி போனதாலே
கண்கொண்டு பார்க்க சகிக்காமல்
கல்லாகி போனதாக கடவுள் சொன்னார்

சாதிமத பேதத்தின் அடிப்படையில்
சமமற்ற சமுதாய செயல்கள் கண்டு
கல்லாய் சமைந்ததாய் சாமி சொன்னார்

காவிதறித்த சில கயவர்களின்
கருங்காலித்தனம் கண்டு
கற்சிலையாய் போனதாக சங்கடப்பட்டார்

தான் அருளிச்செய்த தீந்தமிழில்
அர்ச்சனை செய்யாத அறிவிலிக்கு
அருள்பாலிக்க மனமின்றி
கல்லாய்ப் போனதாக ஆதங்கப்பட்டார்

மனித வாழ்வின் ஆதாரமாய்
தான் அமைத்திட்ட இயற்கை வளத்தினை
மனிதன் அழித்தொழிக்க முற்படும்
அவலநிலையினை
தனக்கு தானே தோண்டிக்கொள்ளும்
சவக்குழியினை
காணும் சக்கியற்று
கல்லாகி போனதாக
கதைத்து விடைப்பெற்றார் கடவுள்;

அன்பையும் அமைதியையும் நோக்கி
மனித மனங்களை ஆற்றுப்படுத்துவோம்
கறையற்ற மானுட சமூகம் கண்டு
கல்லிருந்து கடவுளை மீட்டெடுப்போம்..

Thursday, April 8, 2010

எனது படைப்பு


“தொங்குபாலம்”
(ஒரு சிறுகதை தொகுப்பு)

Wednesday, February 24, 2010

இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!

போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
புரிந்துகொள்

நீ என் உயிர் என கூறி
உனை மட்டப்படுத்த மனமில்லை
ஆனால் நீ பிரிந்தால்
நான் பிணம் என்பதை மட்டும்
புரிந்துகொள்....